Friday 17 May 2013

தமிழ் சினிமாவிற்க்கு யாரைத்தான் வில்லனாகச் சித்தரிப்பது.



இனி கொசுக்களைத்தான் வில்லனாக காட்ட வேண்டும்: என ஆதங்கத்துடன் இயக்குனர் ரவிக்குமார் பேசியதை எப்போதோ இணையத்தில் வாசித்தேன்.   குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்தவர்களையோ ஜாதியைச் சார்ந்தவர்களையோ வில்லனாகச் சித்தரித்தால் சம்பந்த்தப்பட்டவர்கள் சண்டைக்கு வந்துவிடுகின்றார்கள், என்று அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.வாசித்த போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. இப்போது தான் வேளை வந்தது.

எனக்கு பன்மொழிப் படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டு.  அதிலே வருகின்ற விதவிதமான திரைக் கதைகளை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எம் தமிழ்ப் படங்களில் எல்லாம் இப்படிக் காட்சிகள் வராதா என எண்ணியிருக்கிறேன்.

என்ன மொழிப்படம், யார் தயாரித்தது, யார் இயக்கியது, யார் நடித்தது என்று எல்லாம் கேட்டு விடாதீர்கள். நான் ஒரு அப்பாவிக் குடும்பத்தலைவி.  இரவு வேளைகளில் இரவு உணவு சமைத்து, பிள்ளைகளிற்க்குப் பரிமாறி, அவர்கள் அடுத்தநாள் பாடசாலைக்கு ஆயத்தமாக இருக்கிறார்களா என்பதைக் கவனித்து, அவர்களைப் படுக்கைக்கு அனுப்பி, அதன் பின்பு வீடு வாசல் ஒதுக்கி, ஈர உடைகள் உலரவிட்டு, அதன்பின்பு நடுசாமம் தாண்டி வேலை முடித்து வீடு வருகின்ற கணவருக்கு காவல் இருக்கின்றவேளைகளில் ரீவியை முடுக்குகின்ற போது என்ன படம் வருகின்றதோ அதைப் பார்க்கின்ற ரகம் நான்.  நான் ரீவியை முடுக்குகின்றபோதுதான் படம் ஆரம்பித்திருக்கும் என்று சொல்லமுடியாது.  ஆரம்பத்தில் இருந்து படம் பார்ப்பது என்பது என் வாழ்க்கையில் இல்லவே இல்லை.  இப்போ அதுவா முக்கியம்.  விடயத்திற்க்கு வருகின்றேன்.  நான் பார்த்து ரசித்த இரண்டு படங்களைப்பற்றி எழுதுகின்றேன்.

அது அந்நியரின் வருகைக்கு முன்னான செவ்விந்தியர்கள் பற்றிய படம்.  படத்தில் கதாநாயகனை வில்லன்கள் துரத்துகின்றார்கள்.  கதாநாயகன் அடர்ந்த மழைக்காடு ஒன்றினை ஊடறுத்துக் கொண்டு ஓடுகின்றான், ஓடுகின்றான்,  படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கின்றான்.  படம் முழுவதுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சைப் பசேல்தான். வில்லன்களின் அச்சுறுத்தலைத் தாண்டி இடைநடுவே புலியும் கரடியும் பாம்பும் நிலைக்குத்தாகப் பாயும் நீர்வீழ்ச்சியும் அவனை அச்சுறுத்துகின்றன.  இயக்குனர் பார்ப்பவரை அடர்ந்த மழைக்காட்டிற்க்கு அழைத்துச் செல்கின்றார்.  பார்ப்பவருக்கு மழைக்காடுகள் பற்றிய அறிவு வளர்கின்றது.  இங்கு படத்தின் முக்கிய வில்லன் அழகிய இயற்க்கையும் அது தருகின்ற இடைஞ்சல்களும் தான்.

இன்னுமொரு படம், பார்த்து எத்தனை ஆண்டு சென்றாலும் மனதை விட்டு அகலமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.  படம் தொடங்கி முடியும் வரையும் முழங்கால் வரைக்குமான வெள்ளை வேளேரென்ற பனி.  இந்த அழகான பனிதான் படத்தின் வில்லன்.  ஒரு அப்பாவி ஊமைக் கதாநாயகியும் அழகோ கவர்ச்சியோ இல்லாத முரட்டுத்தனமான அழுக்கு நிறைந்த கதாநாயகனும் காலநிலையுடன் படுகின்ற பாடுதான் கதை.  ஒரு பெண்ணைக் கவருவதற்க்கு என்று அவனிடம் எதுவும் இருக்கவில்லை.  அவன் அந்த்தப் பெண்ணை அடிமையாக விலைக்கு வாங்கி அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத தன் குக்கிராமத்துக்குக் கூட்டிக் கொண்டு வருகின்றான்.  அவனை வெறுப்பதிலும் குளிருடனும் பனியுடனும் போராடுவதிலுமே அவள் பாடு கழிகின்றது.  சிறிது காலம் ஒரே குடிசையில் போராடி வாழ்ந்த பாசம் காதலாக மலர, வசதியாக வாழ வாய்ப்புக் கிடைத்த போதிலும் ஒரு காலை இழந்த்த நொண்டிக் கதாநாயகனுடன் வசதிகள் அற்ற குக்கிராமத்தில் மீண்டும் வாழ வருகிறாள் அந்த ஊமை தெய்வப் பெண்மணி

ஏதோ மனதில் பட்டதை எழுதுகின்றேன்.  இப்படிப் படங்கள் தமிழிலும் வரவேண்டும் என்று ஒரு ஆதங்கம் தான்.  






No comments:

Post a Comment